9ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் கலந்துகொள்ள சகல எம்.பிக்களுக்கும் அறிவிப்பு
எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகும் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் கடந்த ஓகஸ்ட் 14ஆம் திகதி அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் மூலமே பாராளுமன்ற செயலாளர் நாயகம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் 223 பேருக்கும் இந்தக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் ஒன்றிற்கு அமைய சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரை நியமிப்பது, புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை எடுத்துக்கொள்வது போன்ற நிகழ்வுகள் அன்றைய தினம் இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய எந்தவொரு மொழியிலும் பதவிச் சத்தியம் அல்லது உறுதியுரை அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்காக மும்மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சகல உறுப்பினர்களின் மேசைகளிலும் வைக்கப்பட்டிருக்கும் என்றும் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்துக்கான செயற்றிட்டங்கள் மற்றும் விபரக் குறிப்புக்கள் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகத்தின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)