இலங்கையில் புதிய பல்கலைகழகத்தை அங்குரார்ப்பணம் செய்யும் Curtin

இலங்கையில் புதிய பல்கலைகழகத்தை அங்குரார்ப்பணம் செய்யும் Curtin

Curtin University Australia  தனது புதிய உலகளாவிய பல்கலைகழக வளாகமான Curtin University Colombo ஐ கொழும்பில் நடைபெற்ற வைபவ நிகழ்வில் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தது.

புதிதாகத் திறக்கப்பட்ட Curtin University Colombo பல்கலைகழகத்துடன்  Curtin ஐந்து சர்வதேச வளாகங்களைக் கொண்டதாக அமைந்திருப்பதுடன், உலகில் அதிக வளாகங்களைக் கொண்ட பல்கலைக்கழகமாக மாறியுள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளில் Curtin இன் ஏற்கனவே நிறுவப்பட்ட வசதிகளை இது நிறைவு செய்கிறது. இந்தப் புதிய வளாகத்தின் ஊடாக இந்து சமுத்திர வளையத்தில்  Curtin இன் உலகளாவிய வலயமைப்பு மேலும் பலமடையும்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த உப வேந்தர் பேராசிரியர் ஹார்லின் ஹெய்ன், உலகளாவிய ரீதியில் உள்ள மாணவர்களுக்கு உயர்ந்த கற்றல் வாய்ப்புக்களை வழங்குவதில் Curtin அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதற்குச் சான்றாக இந்தப் புதிய வளாகம் அமைந்துள்ளது என்றார்.

"முழுமையான வசதிகளைக் கொண்ட வளாகத்துடன் இலங்கையில் மேற்கொண்டுள்ள பிரசன்னமானது இப்பிராந்தியம் தொடர்பில் நாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்திருப்பதுடன், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (SLIIT) நீண்டகால, வெற்றிகரமான கூட்டாண்மையையும் இது கட்டியெழுப்பியுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"2000களின் ஆரம்பத்திலிருந்து இதுவரை Curtin இன் பட்டங்களுடன் 2500ற்கும் அதிகமான இலங்கை பட்டதாரிகளை நாம் கொண்டிருப்பதுடன், இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பது குறித்து நாம் கவனம் செலுத்துவதுடன் நின்றுவிடாது, பொறியியல், கணினியியல், வணிகம் மற்றும் புதிய தொழில்துறைகளான சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு மற்றும் மனிதநேயம் போன்ற துறைகளிலும் புதிய பாடத்திட்டங்களையும் நாம் விஸ்தரித்துள்ளோம்" எனச் சுட்டிக்காட்டினார்.

"Curtin University Colombo வளாகமானது Curtin இற்குப் புதிய அத்தியாயமாக அமையும் என்பதுடன், இந்த வளாகம் இலங்கை மற்றும் உலகளாவிய சமூகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதைப் பார்க்க ஆவலாக இருக்கின்றேன்" எனவும் அவர் தெரிவித்தார்.

Curtin University Colombo ஆனது புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் பலவற்றுடன் இயங்கவுள்ளது. இது இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கான வாய்ப்புக்களை மேலும் விஸ்தரிக்கவிருப்பதுடன், இந்த வாய்ப்புக்களைப் பிராந்தியத்தில் விரிவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

Curtin இன் பாடநெறிகளைத் தொடர்வதற்காக இலங்கையில் தற்பொழுது 700 மாணவர்கள் உள்வாங்கப்பட்டிருப்பதுடன், புதிய Curtin Colombo வளாகத்தில் கற்பதற்கான 2025ஆம் ஆண்டின் முதலாவது தவணைக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது கோரப்பட்டுள்ளன.

Curtin University Colombo இற்கும் SLIIT நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டாண்மை உயர்ந்த இடத்திற்குச் செல்வதையிட்டுப் பெருமையடைவதாக Curtin University Colombo இன் தலைவரும், SLIIT இன் உபவேந்தருமான பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார்.

"உள்நாட்டு மாணவர்களுக்கு உயர் தரத்திலான சர்வதேச கல்விக்கான அணுகலை வழங்கும் அதேநேரம், இந்தக் கூட்டாண்மையின் ஊடாக இலங்கையின் உயர்கல்வியில் சிறந்த சர்வதேச நடைமுறையை வெற்றிகரமாகக் கொண்டுவர முடிந்துள்ளது" என்றார்.

"உலகின் சிறந்த முதல் நூறு பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தொடர்ந்தும் தரப்படுத்தப்படும் Curtin University, முழுமையான வசதிகளைக் கொண்ட வளாகத்தை இலங்கையில் அமைத்திருப்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக இருப்பதுடன், இந்த வலயத்தில் உயர்ந்த கல்வியின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதாக அமையும்" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"திறன் மற்றும் போட்டித்தன்மை நிறைந்த தொழிலாளர்களை உருவாக்கும் இலங்கையின் முன்னேற்றத்திற்கு ஊரசவin ருniஎநசளவைல ஊழடழஅடிழ பங்களிக்கும் அதேநேரம், இலங்கையின் கல்வி மற்றும் ஆய்வுகளுக்கும் கணிசமான பங்களிப்பைச் செலுத்தும்' என்றார்.

Curtin University Colomboஆனது மாணவர்கள் இலங்கையில் தமது உயர் கல்வியை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் அதேநேரம், பின்னர் அவுஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது மொரீசியஸ் போன்ற நாடுகளில் உள்ள எந்தவொரு பல்கலைக்கழகத்திற்கும் மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.

இந்த முறைமையானது மாணவர்கள் தமது கல்விப் பயணத்திற்கு எவ்வித இடையூறும் இன்றி உலகளாவிய ரீதியிலான வெளிப்பாட்டுக்கு நெகிழ்வான வாய்ப்பைப் பெறுவதுடன், திறன்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், Curtin இன் சர்வதேச வலையமைப்புடன் இணைந்து செயற்படுவதற்குமான வாய்ப்புக்களையும் உறுதிசெய்கின்றது.