அனர்த்தங்களை தடுக்கும் திட்டங்கள் அவசியம்

அனர்த்தங்களை தடுக்கும் திட்டங்கள் அவசியம்

றிப்தி அலி

காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள இலங்கை இன்னும் தயாராகவில்லை என்பது அண்மையில் ஏற்பட்ட பெங்கால் புயலின் போது தெளிவாகியது.

தென் மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்தன.

இதன் காரணமாக பல்வேறு பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன் மண்சரிவும் ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டன. இதனால் அனர்;த்தம் மேலும் அதிகரித்தது.

இந்த திடீர் அனர்த்தம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதுடன் கல்விப் பொதுத் தராதப் பரீட்சையும் ஒத்திவைக்கப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு  ஆகிய மாகாணங்கள் இந்த அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகக் குறைந்தது 12 பேர் இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணமால் போயுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 52 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 77 ஆயிரத்து ஐநூற்று 11 பேர் இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை அரசாங்கத்தினால் எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. இதனைப் போன்ற வெள்ள அனர்த்தமொன்று இந்த வருடத்தின் ஜுன் மாதமும் இலங்கையில் ஏற்பட்டது. இதன்போதும் பல உயிரிழந்ததுடன் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக எமது நாட்டில் அடிக்கடி பாரிய அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. எனினும், இந்த அனர்த்தங்களுக்கு இலங்கை மக்களும் அரச அதிகாரிகளும் தயாரில்லை என்பது தெளிவாக விளங்குகின்றது.

இதன் காரணமாகவே காரைதீவு பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அரபுக் கல்லூரி மாணவர்களின் சடலங்களை மீட்க இரண்டு நாட்கள் தேவைப்பட்டதென பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அரபுக் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், உழவு இயந்திர சாரதி, பொதுமகன் ஒருவர் ஆகியோரின் சடலங்கள் கடந்த 28ஆம் திகதி வியாழக்கிழமை வரை மீட்கப்பட்டன.

அரபுக் கல்லூரி தகவல்களின் பிரகாரம் இன்னுமொரு மாணவனைக் காணவில்லை என்பதனால் அவரைத் தேடும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதனை அப்பிரதேசத்திலுள்ள சிவில் அமைப்புக்களே மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெள்ள அனர்த்தங்களை பார்வையிடுவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சரான ஓய்வுபெற்ற மேஜனர் ஜெனரல் அருன ஜயசேகர கடந்த வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது காரைதீவு பிரதேசத்தின் ஊடாகச் சென்ற அவர், குறித்த பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாடொன்றும் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, உயிரிழந்த மாணவர்கள் கல்வி கற்ற அரபுக் கல்லூரி அதிபரையும் ஆசியரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை மாலை உத்தரவிட்டிருந்தது.

எனினும், இந்த சம்பவத்திற்காக காரைதீவு பிரதேச செயலாளர், அனர்த்த நிவாரண அதிகாரிகள் மற்றும் முப்படையினரும் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கடுமையான விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாது அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்திருக்கும் பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கத் தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை  அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி நிறுவனங்களை பலப்படுத்தி அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கு புதிய தீர்வுகள் வழங்க  வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டே அனர்த்த முகாமைத்துவ சட்ட முறைமைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

அத்துடன் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் அரச ஊழியர்களிடம்  ஜனாதிபதி  கோரிக்கை விடுத்துள்ளார். எப்படியோ, காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள இலங்கையினை தயார்படுத்த வேண்டியது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும்.