இலங்கை - ஜப்பான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் வசந்த தெரிவு

இலங்கை - ஜப்பான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் வசந்த தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் நேற்று (09) புதன்கிழமை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே இத்தெரிவு இடம்பெற்றது. 

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இஸொமாடா இதில் விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதில் இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து தெரிவுசெய்யப்பட்டார். இங்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஏழு தசாப்த கால இருதரப்பு இராஜதந்திர உறவுகள் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர். 

உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வலுவான உறுதிப்பாட்டையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

அத்துடன், மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தல் மற்றும் இரு சட்டவாக்க அமைப்புகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தல் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த தொடர்புகளை வளர்ப்பதற்கு புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட நட்புறவுச் சங்கம் ஒரு தளமாக செயல்படும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, ஜப்பான் தூதுவர் கௌரவ அகியோ இஸொமாடா பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி மரியாதை நிமித்தமாக பாராளுமன்றத்தில் சந்தித்தார். இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான ஜப்பானின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இக்கலந்துரையாடலில்  ஜப்பான் தூதுவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.