சன்ஷைன் ஹோல்டிங்ஸின் புதிய யுகத்தை நோக்கிய பொறுப்பை ஏற்கிறார் ஷியாம்

சன்ஷைன் ஹோல்டிங்ஸின் புதிய யுகத்தை நோக்கிய பொறுப்பை ஏற்கிறார் ஷியாம்

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் நிறைவேற்று அதிகார பதவியில் இருந்த விஷ் கோவிந்தசாமி அப்பதவியிலிருந்து விலகி, பிரதித் தலைவராக நிறைவேற்று அதிகாரமில்லாத பதவியை வகிப்பதாக நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது.

குழுமத்தில் அவர் வகித்த சிறந்த தலைமை, புத்தாக்கமான மாற்றங்களை கொண்டு வருதல் மற்றும் பொறுப்பான தொழில் முனைவோருக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை அவரது 28 ஆண்டு வணிக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சாதனைகளாக உள்ளன.

கோவிந்தசாமி தொடர்ந்து குழுமத்தின் ஆலோசகராகப் பணியாற்றுவார். கோவிந்தசாமிக்கு கௌரவமளிக்கும் நிகழ்வாகவும், அவரது தனித்துவமான தொழில்முனைவோர் பயணத்திற்கும் குழுமத்தின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய மாபெரும் சேவைகளை கௌரவிக்கும் வகையிலும் அண்மையில் விசேட நிகழ்வொன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள், சன்ஷைன் ஹோல்டிங்ஸின் சிரேஷ்ட தலைமை ஊழியர்கள் மற்றும் துறையின் பிற தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கௌரவமளிப்பு விழாவில் உரையாற்றிய சன்ஷைன் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி,

“கடந்த மூன்று தசாப்தங்களாக நமது வணிகம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இப்போது நான் இந்த பொறுப்பை ஏற்கும் இந்த நேரத்தில், கோவிந்தசாமி உருவாக்கிய மதிப்புகளையும், அடைந்த வெற்றிகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நான் உறுதிபூண்டுள்ளேன்.

எமது குறிக்கோள், அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு, வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வணிகத்தை உருவாக்குவதாகும். சன்ஷைன் ஹோல்டிங்ஸை இன்றைய நிலைக்குக் கொண்டுவர அவர் காட்டிய அர்ப்பணிப்புக்கும், அவரது தூரநோக்கு தலைமைத்துவத்திற்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். அவருக்கு என் நல் வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டில் ஷியாம் சதாசிவம் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து குழுமத்தின் வணிக வளர்ச்சி முயற்சிகளை அவர் வழிநடத்திச் சென்றார்.

2005ஆம் ஆண்டில் நிறுவனத்தில் இணைந்துகொண்ட இவர், தலைமைக் குழுவின் உறுப்பினராக குழுமத்தின் சமீபத்திய வெற்றிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

கோவிந்தசாமியுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக பணியாற்றிய இவர், விரிவான அறிவும், அனுபவங்களின் செறிவும் கொண்டவர். வணிகத்தின் ஆழமான புரிதல் மற்றும் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு உதவும் உத்தியான திறனாய்வு ஆகியவற்றைக் கொண்டு, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவர் வழிகாட்டுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1997ஆம் ஆண்டில் வட்டவலை பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக சன்ஷைன் ஹோல்டிங்ஸுடன் இணைந்த கோவிந்தசாமி, அதை இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க பிராந்திய தேயிலை நிறுவனமாக மாற்றினார். 

Zesta, வட்டவலை தேயிலை மற்றும் ரண்கஹட்ட போன்ற பிரபலமான வர்த்தக நாமங்களை அறிமுகப்படுத்தியதோடு, சன்ஷைன் குழுமத்தை சுகாதார சேவைகள், நுகர்வோர் பொருட்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பால் சார்ந்த வணிகங்கள் வரை விரிவுபடுத்துவதில் அவர் செய்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 

2003ஆம் ஆண்டில், இலங்கையின் மருந்து வணிகத்தை புதிய மட்டத்திற்கு உயர்த்திய முன்னோடி ஹெல்த்கார்ட் ஃபார்மசி வலையமைப்பை அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்குரியது.

2007ஆம் ஆண்டு முதல் சன்ஷைன் ஹோல்டிங்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றிய கோவிந்தசாமி, Wilmar மற்றும் SBI Japan போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் முக்கிய கூட்டு முயற்சிகளை உருவாக்கினார். இதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தனியார் பங்கு நிறுவனங்களிடமிருந்து குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்த்தார். 

அவரது தலைமையின் கீழ், நிறுவனம் இலங்கையின் சிறந்த சேவை நிறுவனங்களில் முதல் 40 இடங்களிலும், ஆசியாவின் சிறந்த சேவை நிறுவனங்களில் 57வது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டது. மேலும், குழுமம் இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

வணிக வெற்றிகளுக்கு அப்பால், சுகாதாரம் மற்றும் கல்வியின் நீண்டகால மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு, கோவிந்தசாமி 2017ஆம் ஆண்டில் 'Sunshine Foundation for Good-SFG என்ற அறக்கட்டளை நிறுவனத்தை நிறுவினார்.

மேலும், 2021ஆம் ஆண்டில் இலங்கை வர்த்தக சபையின் (CCC) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர் உள்ளிட்ட, இலங்கை பணியாளர் சங்கம் மற்றும் பல முன்னணி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் தேசிய மட்டத்தில் முக்கிய தலைமைப் பதவிகளை வகித்துள்ளார்.

சன்ஷைன் ஹோல்டிங்ஸின் நீண்டதூர பயணத்தைப் பற்றி கருத்து தெரிவித்த விஷ் கோவிந்தசாமி, 

“சன்ஷைன் ஹோல்டிங்ஸ் எனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமையாகும். உள்நாட்டுப் போரிலிருந்து பொருளாதார நெருக்கடி வரை, நாங்கள் பல சவால்களை சந்தித்துள்ளோம். 

ஆனால் கடந்த 28 ஆண்டுகளாக எங்களின் உறுதியான பொறுமையே எங்களை முன்னேற்றியுள்ளது. எங்கள் குழு, கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுடையவன். வருங்காலத்தில் ஒரு ஆலோசகராக நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க எதிர்பார்க்கிறேன். ஷியாமின் தலைமையின் கீழ் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் இன்னும் பெரிய வெற்றிகளை அடையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.