இந்த வருட தேர்தலில் டிஜிட்டல் தளங்கள் ஜனநாயகத்தை எவ்வாறு மீள்வரையறை செய்கின்றன

இந்த வருட தேர்தலில் டிஜிட்டல் தளங்கள் ஜனநாயகத்தை எவ்வாறு மீள்வரையறை செய்கின்றன

மனுஜா விஜேசூரிய

இந்த வருட உலகளாவிய தேர்தல்களுக்கு ஓர் குறிப்பிடத்தக்க ஆண்டாகும், பல்வேறு கண்டங்களில் உள்ள பல நாடுகள் இந்த ஆண்டு தேர்தல்களை நடாத்துகின்றன. 2024 ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து மிகவும் பரபரப்பாக இருந்ததுடன், உலக சனத்தொகையில் அண்ணளவாக அரைவாசி பேர் வாக்களிப்பை எதிர்கொள்கின்றார்கள் என்று கூறப்படுகிறது .

குறிப்பாக அமெரிக்காவில் பிரதான தேர்தல்களாக நவம்பர் 5 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்கள் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் ஏப்ரல் 19 முதல் யூன் 1 வரை பொதுத் தேர்தல்கள் நடைபெற்றதுடன் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அரசியல் செயற்பாடு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தேர்தல்கள் கணிசமான எண்ணிக்கையிலான வாக்காளர்களை மட்டுமல்லாது, டிஜிட்டல் தளங்கள், குறிப்பாக சமூக ஊடகத் தளங்களால் தேர்தல் செயன்முறைகளில் எவ்வாறு தாக்கம் செலுத்தப்படுகின்றன என்பதில் பெரும் மாற்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்த ஆக்கமானது இலங்கையில் 2024 ஜனாதிபதித் தேர்தலை மையமாக கொண்டு, உலகளாவிய தேர்தல்கள் மற்றும் ஜனநாயகம் டிஜிட்டல் தளங்களில் எவ்வாறு மீள்வரையறை செய்யப்படுகின்றன என்பதை ஆராய்கிறது.

டிஜிட்டல் ஜனநாயகத்தின் எழுச்சி

2024ஆம் ஆண்டில், டிஜிட்டல் தளங்களின் பரிணாமம் ஜனநாயக செயன்முறையை அடிப்படையில் மாற்றியுள்ளதுடன், அதனை மிகவும் சிக்கலானதாகவும் நுணுக்கமானதாகவும் ஆக்கியுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதற்கும், ஆதரவாளர்களைத் திரட்டுவதற்கும், அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சமூக ஊடகங்களை முதன்மையான கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.

இந்தப் போக்கானது தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் அன்றாட வாழ்வில் சமூக ஊடகங்களின் எங்கும் நிறைந்த ஒருங்கிணைப்பு காரணமாக துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் உள்ளடக்கத்துடன் வாக்காளர்கள் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதை சமூக ஊடகங்கள் மீள்வடிவமைத்துள்ளதுடன், இது தகவல்களை விரைவாகப் பரப்ப அனுமதிப்பதுடன் அரசியல்வாதிகள் மற்றும் தொகுதிகளுக்கு இடையேயான அதிகரித்த இடைவினை உறவினை விருத்தியாக்கின்றது.

ஓர் குறிப்பிடத்தக்க உதாரணம் இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அவர் வெற்றிபெற்று சில நாட்களிலேயே முகநூலில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாண்டி, இந்த மைல்கல்லை எட்டிய ஆறாவது இலங்கை அரசியல்வாதி ஆனார். அத்தகைய பின்தொடர்பவர்களைப் பெறுவதற்கான அவரது திறன், சமகால அரசியல் பரப்பில் சமூக ஊடகங்கள் வகிக்கும் முக்கிய வகிபங்கை விளக்குகின்றது.

இருப்பினும், இந்த டிஜிட்டல் ஈடுபாட்டுடன் அதனுடைய சவால்களும் இணைந்துள்ளன. உதாரணமாக, பொதுத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, தொலைபேசி ஒட்டுக்கேட்ட அவதூறுக்கு மத்தியில், சமூக ஊடகங்களுக்கான அணுகலைத் தடுப்பதற்கான மொரீஷியஸின் தீர்மானம் சுதந்திரமான கருத்து மற்றும் தேர்தல் செயன்முறையின் நேர்மை தொடர்பான கரிசனங்களை எழுப்புகின்றது.

அமெரிக்கத் தேர்தல் நெருங்கி வரும்போது, ட்ரம்ப் ஆதரவாளர்களால் பெரும்பாலும் செயற்படுத்தப்பட்டு வெளிநாட்டு தரப்பினரால் விரிவாக்கப்படும் வாக்காளர் மோசடி பற்றிய தவறான தகவல்களுடன் நிகழ்நிலை தளங்கள் நிரம்பி வழிகின்றன.

கோரல்களில் குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களிக்கும் குற்றச்சாட்டுகள் முதல் கையாளப்பட்ட காணொளிகள் வரை உள்ளதுடன், இவை அனைத்தும் தேர்தலின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் இந்த வதந்திகளுக்கு தீர்வு கண்டபோதிலும், தவறான தகவல்களின் விரைவான பரவலானது தேர்தல் செயற்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன், இது அமெரிக்காவில் 2020க்குப் பிந்தைய தேர்தல் பதட்டங்களைப் போன்ற அமைதியின்மை பற்றிய கரிசனங்களை எழுப்புகிறது, இது சமூகத்தின் ஜனநாயக கட்டமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது .

நவீன அரசியல் பிரச்சாரங்களில் பாரம்பரிய ஊடகங்களிலிருந்து சமூக ஊடகங்களுக்கு மாற்றமடைதல்

ஜனநாயகத்தின் மீது டிஜிட்டல் தளங்களின் செல்வாக்கானது குறிப்பாக 2024 இல் தீவிரமானதுடன் பல்துறை சார்ந்ததாகும். அரசியல் பரப்பு வியத்தகு முறையில் மாறியுள்ளதுடன், வேட்பாளர்கள் சமூக ஊடக தளங்களில் தங்களது இருப்பை நிலைநிறுத்தி பேணுவதை தேவைப்படுத்துகின்றது. இது அரசியல் உரையாடலுக்காக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களை பாரம்பரியமாக நம்பியிருப்பதில் இருந்து படிப்படியாக மாற்றமடைவதைக் குறிக்கின்றது.

உதாரணமாக, இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், வேட்பாளர்கள் வாக்காளர்களுடன் எவ்வாறு ஈடுபட்டார்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதில் சமூக ஊடகங்களுக்கு மாற்றமடைந்தமை தெளிவாகத் தெரிகின்றது.

பாரம்பரியமாக, தகவல்களின் ஓட்டம் பிரதான ஊடகங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டதுடன், இது பெரும்பாலும் அணுகுவதற்கு குறிப்பிடத்தக்க ஆதாரங்களை தேவைப்படுத்தியதுடன், செல்வந்தர்களும் சக்திவாய்ந்தவர்களும் மட்டுமே கதைவிபரிப்புகளைக் கட்டுப்படுத்தும் வழிவகைகளைக் கொண்டுள்ளனர்.

இதற்கு நேர்மாறாக, முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள், வேட்பாளர்களின் நிதி ஆதாரங்களைப் பொருட்படுத்தாமல் வாக்காளர்களைச் சென்றடைவதற்கு மிகவும் அணுகக்கூடிய மற்றும் செலவு குறைவான வழிமுறையை வழங்குவதன் மூலம் தளத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளன.

வேட்பாளர்கள் கூகுள் போன்ற தளங்களையும், இலக்கு வைக்கப்படும் விளம்பரங்களுக்காக வெவ்வேறு சமூக ஊடக தளங்களையும் பயன்படுத்தியதுடன், குரல் பதிவகங்களில் தோன்றியதுடன் பரந்தளவான பார்வையாளர்களுடன் இணைவதற்கு நிகழ்நிலை கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

அதேபோல், பொது மக்களும் தேர்தலின் போது சமூக ஊடகங்களை அணுகியதுடன், முகநூல் போன்ற தளங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாது, அரசியல் வர்ணனைக்காகவும் பகிரப்பட்ட கேலிகள், பதிவுகள் மற்றும் கருத்துகள் மூலமும் நிரம்பி வழிகின்றன. இந்த மாற்றம் அரசியல் பங்கேற்பை மேலும் உள்ளடங்கலானதாக மாற்றியுள்ளதுடன், இது பரந்த அளவிலான குரல்களைக் கேட்க அனுமதிக்கிறது.

சில சந்தர்ப்பங்களில், நிகழ்நிலை தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள், குறிப்பாக தேர்தல்களின் போது மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் பாரம்பரிய இலத்திரனியல் ஊடகங்களை மிஞ்சிவிட்டன என்று வாதிடலாம்.

உதாரணமாக, அமெரிக்க தேர்தல்களின் போது,  டிஜிற்றல் குரல் பதிவகங்கள் போன்ற பாரம்பரியமல்லாத ஊடகங்களின் வளர்ந்து வரும் செல்வாக்கானது, ஜோ ரோகனின் டிஜிற்றல் குரல் பதிவகம் போன்ற தளங்கள் தி வாஷிங்டன் போஸ்ட் போன்ற பாரம்பரிய ஊடக நிறுவனங்களை விட  குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றமை இதற்கு சான்றாகும்.

ஒரு பிரபலமான டிஜிற்றல் குரல் பதிவராக (podcaster) ரோகன், அரசியல் பிரச்சாரத்தின் ஓர் முக்கிய தரப்பாக மாறியுள்ளதுடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போன்ற வேட்பாளர்களை ஈர்ப்பதுடன் அவர் தனது பரந்த பார்வையாளர்களுடன் இணைக்க முயன்றார்.

உதாரணமாக, ட்ரம்ப்புடனான ரோகனின் நேர்காணல் YouTube இல் 41 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதுடன், இது CNN இல் ஹாரிஸின் town hall நிகழ்வின் பார்வையாளர்களை விட அதிகமாக இருந்தது .

பொதுமக்கள் சில சமயங்களில் பாரம்பரிய ஊடகங்கள் பெரும்பாலும் தகவல்களின் மீது ஏகபோக கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாலும், சில வேட்பாளர்களிடம் சார்புடையதாக இருப்பதாலும், அவர்கள் விரும்பும் நபர்களுக்கு அதிகமான ஒளிபரப்பு நேரத்தை ஒதுக்குவதாலும் பாரம்பரிய ஊடகங்களை விட சமூக ஊடகங்களை விரும்புகிறார்கள்.

இந்தப் போக்கை இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களிலும் அவதானிக்கலாம். குறிப்பிட்ட ஊடகங்கள் குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN) போன்ற அரச அலைவரிசைகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அதிகமான செய்திகளை வழங்கியதுடன், ஹிரு தொலைக்காட்சி போன்ற தனியார் அலைவரிசைகள் சஜித் பிரேமதாச மீது அதிக கவனம் செலுத்தின.

இந்த ஊடகச் சார்பு வாக்காளர்களை சமூக ஊடகங்கள் மற்றும் குரல் பதிவகங்கள் போன்ற மாற்றீடான தகவல் ஆதாரங்களைத் தேடத் தூண்டியதுடன், அங்கு அவர்கள் பரந்த அளவிலான குரல்கள் மற்றும் கண்ணோட்டங்களுடன் அல்லது அவர்கள் அதிகம் விரும்பும் வேட்பாளருடன் ஈடுபடலாம்.

டிஜிட்டல் சாம்ராஜ்யம் பெரும் ஆற்றலை வழங்குகிறது, ஆனால் தவறான தகவல், பிழையான தகவல் மற்றும் வெறுப்பு பேச்சு உள்ளிட்ட சவால்களால் நிறைந்துள்ளதுடன், இது தேர்தல் செயன்முறைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும்.

உதாரணமாக, 2024 அமெரிக்கத் தேர்தலின் போது, சமூக ஊடகத் தளங்கள், குறிப்பாக X (முன்னர் ட்விட்டர்), அரசியல் உரையாடலை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க வகிபங்கைக் கொண்டிருந்ததுடன், அங்கு பயனர்கள் நிதி ஆதாயத்திற்காக உண்மையான மற்றும் தவறான உள்ளடக்கத்தை இடுகையிட்டனர் .

இந்த சவால்கள் இருந்தபோதிலும், சமூக ஊடகங்கள் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கான சக்திவாய்ந்த கருவிகளையும் வழங்குகிறது. உண்மைச் சரிபார்க்கை மற்றும் தவறான விவரிப்புகளை நீக்குதல் ஆகியன டிஜிட்டல் பரப்பின் ஒருங்கிணைந்த பகுதிகளாகிவிட்டதுடன், சிவில் சமூக அமைப்புகளும் தனிநபர்களும் தவறான கூற்றுகள் வெளிப்படும்போது அவற்றைச் சரிசெய்வதற்கு ஒத்துழைக்கிறார்கள்.

வினி தயாரிப்பு நிறுவனம் எனப்படும் பிரபல உள்ளடக்க உருவாக்குனர்களுடன் இணைந்து யூடியூப்பில் பகிரப்பட்ட, எவ்வாறு சரியாக வாக்களிப்பது என்பது குறித்த அறிவூட்டல் காணொளிகளை இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டமை குறிப்பிடத்தக்க உதாரணமாகும்.

எனவே, இணையவெளி இரட்டை முனைகளைக் கொண்ட வாள் போல் செயற்படுகிறது: இது தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களைப் பரப்பலாம், ஆனால் அதை எதிர்த்துப் போராடவும், குடிமக்களின் கல்வியை மேம்படுத்தவும், அரசியல் பங்கேற்பை அதிகரிக்கவும் வழிமுறைகளையும் வழங்குகிறது.

பிரச்சார உத்திகளின் பரிணாமம்

அரசியல் பிரச்சாரத்தின் உருமாற்றம் வரலாற்று மற்றும் சமகால சூழல்களில் தெளிவாக வெளிப்படுகின்றது. கடந்த தேர்தல்களை நாங்கள் பகுப்பாய்வு செய்து, 2024ல் நடக்கவிருக்கும் தேர்தல்களை எதிர்பார்க்கும்போது, சமூக ஊடக தளங்கள் கணிசமான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், பிரச்சாரங்களின் போது பகிரப்பட்ட விபரிப்புகளை வடிவமைக்கின்றன என்பது தெளிவாகின்றது.

சுவரொட்டிகள் மற்றும் பேரணிகள் போன்ற பாரம்பரிய பிரச்சார முறைமைகள் இலங்கை போன்ற நாடுகளில் பரவலாக இருக்கும் அதே வேளையில், டிஜிட்டல் பிரச்சாரத்தின் வளர்ந்து வரும் முக்கியத்துவம் வெளிப்படையானது.

இலங்கையில் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் வாக்காளர்களுடன் முனைப்பாக ஈடுபட்டுள்ளதுடன், அவர்களின் நிகழ்நிலை விளம்பர செலவினங்களை கணிசமாக அதிகரித்துள்ளனர்.

பௌதீக பிரச்சார முறைமைகள் ஈடுபாட்டிற்கான முதன்மை வழிமுறையாக இருந்த முந்தைய ஆண்டுகளில் இருந்து இது ஓர் சிறிய மாற்றத்தைக் குறிக்கிறது. உதாரணமாக, தேசிய மக்கள் சக்தி (NPP), முகநூல் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் அவர்களின் பௌதீக பேரணிகளுக்கான நேரலை ஒளிபரப்பைப் பயன்படுத்தியதுடன், இது டிஜிட்டல் சார்ந்த பிரச்சார உத்தியை நோக்கி நகர்வதை சுட்டிக்காட்டுகின்றது.

இந்தியாவில், ஸ்மார்ட் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரிப்பு பிரச்சார உத்திகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வழிவகுத்தது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில், இந்திய சனத்தொகையில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துவதுடன், 2026ஆம் ஆண்டில், இந்தியாவில் ஒரு பில்லியன் ஸ்மார்ட் தொலைபேசி பயனர்கள் இருக்கக்கூடும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த டிஜிட்டல் பெருக்கம் அரசியல் கட்சிகளை பிரச்சார நோக்கங்களுக்காக சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செய்தியிடல் செயலிகளைப் பயன்படுத்த தூண்டியுள்ளது. 2019 பாராளுமன்றத் தேர்தல் "வாட்ஸ்அப் தேர்தல்" என்று கூட வகைப்படுத்தப்பட்டதுடன், இது அரசியல் ஈடுபாட்டிற்காக டிஜிட்டல் தளங்களில் அதிகரித்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

இளைய வாக்காளர்களுக்கான போட்டி

2024ஆம் ஆண்டில், இளைஞர்களின் ஈடுபாடு அரசியல் பிரச்சாரங்களில் ஓர் மையப் புள்ளியாக மாறியுள்ளது, ஏனெனில் வேட்பாளர்கள் இளம் வாக்காளர்களை இணைக்கவும் அணிதிரட்டவும் முயற்சி செய்கிறார்கள். இலங்கையின் 15 மற்றும் 29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள், சனத்தொகையில் 23.2% (4.64 மில்லியன்) - கிட்டத்தட்ட நாட்டின் கால் பகுதியினராவர்.

இந்த சனத்தொகை ஓர் சக்திவாய்ந்த வாக்கு சக்தியாக உருவாகி வருகிறது; தேர்தல் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பதிவு செய்யப்பட்ட 17.1 மில்லியன் வாக்காளர்களில், ஒரு மில்லியன் வாக்காளர்கள் புதியவர்கள் என்பதுடன், இது இளம் வாக்காளர்களின் அதிகரித்து வரும் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய இளைஞர்கள், பாரம்பரிய அரசியல் முறைமைகளை கடைபிடிப்பதை விட, பெரும்பாலும் எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டவர்களாவர். வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார ஸ்திரமின்மை, மோசமான வாழ்க்கை நிலைமைகள் போன்றவற்றால் ஏமாற்றமடைந்த பல இளைஞர்கள் புலம்பெயர்தலை சிறந்த வாழ்க்கைக்கான பாதையாக கருதுகின்றனர்.

இந்த தலைமுறையில் பெரும்பாலானோர் நிறுவப்பட்ட கட்சி அரசியலில் சந்தேகம் கொண்டவர்களாவர். அவர்கள் வெளிப்படையாக அரசியல் ரீதியாக செயற்படாத போதிலும், அவர்கள் இலங்கையின் அரசியல் பரப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் சமீபத்திய அரகலய எதிர்ப்புக்களில் காணப்படுவது போல், தேவையைக் இனங்காணும் போது ஈடுபடத் தயாராக உள்ளனர்.

முக்கியமாக மற்றும் இளைய வாக்காளர் தளத்திற்கும் தங்களின் 50 மற்றும் 60 களில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கும் இடையேயான கணிசமான வயது இடைவெளி துண்டிப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளதுடன், அரசியல் தலைவர்களை தங்களது அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்துகின்றனர்.

குறிப்பாக, Z தலைமுறை தொழில்நுட்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 94% பேர் நாளாந்தம் நிகழ்நிலையில் உள்ளனர் என்று Kantar Sri Lanka தெரிவித்துள்ளது. அவர்கள் முதன்மையாக டிஜிட்டல் தளங்கள் மூலமாக தகவல்களை அணுகுவதுடன், உள்ளூர் உள்ளடக்கத்தை டிஜிட்டல் மற்றும் பாரம்பரிய ஊடகங்களில் நுகர்வதுடன்  49%பேர் நாளாந்தம் உள்ளூர் தொலைக்காட்சியை பார்ப்பதுடன், 44% சமூக ஊடகங்களை நம்பியுள்ளனர் .

இந்த மாற்றத்தை அங்கீகரித்து, 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் அதிகம் ஈடுபட்டுள்ள இளம் வாக்காளர்களுடன் இணைவதற்கு சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தினர். இலங்கை மற்றும் உலகளாவிய தேர்தல்களில் காணப்படுவது போல், இந்த குடித்தொகைக்கான போட்டி கடுமையாக உள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில், வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையேயான போட்டியானது, இளைய வாக்காளர்களை ஈடுபடுத்துவதற்கான ஒரு முக்கியமான போர்க்களமாக TikTokஐ உயர்த்தியுள்ளது.

இரண்டு பிரச்சாரங்களும் இந்த முக்கியமான குடித்தொகையின் கவனத்தை ஈர்ப்பதற்காக சமூக ஊடக உத்திகளில் பெரிதும் முதலீடு செய்துள்ளன. மேலும், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களின் வகிபங்கு, குறிப்பாக தேர்தல் காலங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக் போன்ற தளங்கள் மூலம் இளைய வாக்காளர்களைக் கவரும் வகையில் வேட்பாளர்கள் அதிக அளவில் முயற்சிக்கும் ஒரு பரந்த போக்கை பிரதிபலிக்கிறது.

உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, "#AskRanil" என்ற தலைப்பில்  இளம் வாக்காளர்கள் பல சமூக ஊடக அலைவரிசைகளினூடாக நேரடியாக வினாக்களை சமர்ப்பிக்க இடமளிக்கின்ற வினா-விடை அமர்வினை நடாத்தினார்.

இந்த உத்திகளில் அனுர குமார திஸாநாயக்க மற்றும் NPP இலங்கை முழுவதும் இளைஞர் பேரணிகளை ஏற்பாடு செய்தமையும் உள்ளடங்கும். இந்தப் புதிய அணுகுமுறைகள் இளைய பார்வையாளர்களுடன் இணைவதற்கும் அவர்களின் கரிசனங்களுக்குப் பதிலளிப்பதற்கும் வேட்பாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை காட்டுகின்றன.
    
ஒரு காலத்தில் முதன்மையாக பொழுதுபோக்கிற்கான இடமாகக் கருதப்பட்ட டிக்டோக் போன்ற தளங்களின் பரிமாண விருத்தி, அது ஒரு அரசியல் ஊடகமாக மாறியமையை பிரதிபலிக்கிறது. நவீன தேர்தல் அரசியலில் சமூக ஊடகங்களின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், இளம் பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு வேட்பாளர்கள் இந்த தளத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

வேட்பாளர்கள் வாக்காளர்களுடன் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதில் முன்னெப்போதுமில்லாத இந்த மாற்றம் டிஜிட்டல் தளங்களை அரசியல் பிரச்சாரத்தில் ஒருங்கிணைத்து, தேர்தல்கள் நடாத்தப்படும் விதத்தை மீள்வடிவமைப்பதில் ஒரு பரந்த போக்கைக் குறிக்கிறது.

தேர்தல் செயன்முறைகள் மற்றும் நேர்மைக்கான சவால்கள்

டிஜிட்டல் தளங்களுக்கு ஜனநாயக ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான சாத்தியம் இருந்தபோதிலும், குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. அரசியல் பரப்பின் முரண்பாடு ஒரு முக்கிய பிரச்சினையாகும். இலங்கையின் அண்மைய ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், வெற்றி பெற்ற வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக அவர் வெற்றி பெறாத வடக்கு மற்றும் கிழக்கு தேர்தல் தொகுதிகளில் உள்ள தமிழ் சமூகங்கள் மீது இந்த விரோதப் போக்கு இருந்தது. சமூக ஊடகங்களில் நடந்த கலந்துரையாடல்கள் இந்த வெறுப்புப் பேச்சை மேலும் தீவிரப்படுத்தியதுடன், இதனை மேலும் பரவலாக்கியது.

வேட்பாளர்கள் தேசியவாத உணர்வுகளுக்கு அடிக்கடி அழைப்பு விடுத்த கடந்த தேர்தல்களைப் போலல்லாமல், இந்தத் தேர்தலின் பிரச்சாரச் சுழற்சியானது தேசியவாதத்தில் வலுவாக கவனம் செலுத்தவில்லை என்பதால் இந்தப் போக்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும், இலங்கையில் இன நல்லிணக்கம் ஒரு சவாலாகவே உள்ளது என்பதை சில பகுதிகளில் காணப்படும் விரோதப் போக்கு காட்டுகிறது. சமூக ஊடகங்கள் பிளவுபடுத்தும் சொல்லாடல்களை விரைவாகப் பரப்புவதன் மூலம் இந்த உணர்வுகளைத் தூண்டியதுடன், டிஜிட்டல் தளங்கள் எவ்வாறு சமூக முரண்பாட்டை அதிகரிக்கும், பிளவுகளை ஆழமாக்கும் என்பதுடன் ஜனநாயக செயன்முறைகளில் சமூக ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

வெறுக்கத்தக்க பேச்சு, தவறான தகவல் மற்றும் பிழையான தகவல் ஆகியவற்றின் பரவலானது உலகளவில் ஜனநாயக செயன்முறைகளின் ஒருமைப்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க சவால்களை முன்வைக்கிறது. deepfakeகளின் தோற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலமாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் பரப்பை மேலும் சிக்கலாக்கியுள்ளதுடன், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது தேர்தலுக்கு முன்னதாக இந்த சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

உதாரணமாக, இந்தியாவில், AI மூலமாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தி, அரசியல் கட்சிகள் அறிவிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் deepfakeகளை அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கட்டளையிட்டது .

ஏப்ரல் 10, 2024 அன்று தேசிய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தென் கொரியா AI மூலமாக உருவாக்கப்பட்ட deepfakeகிலிருந்து சவால்களை எதிர்கொண்டது. இருப்பினும், முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் மூலம் அவற்றின் தாக்கத்தை நாடு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. தேர்தல் தொடர்பான deepfakeக்களை தடைசெய்யவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் பொது உத்தியோகபூர்வ தேர்தல் சட்டத்தை அரசாங்கம் திருத்தியது.

பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, AI மூலமாக உருவாக்கிய உள்ளடக்கத்தை நீர்வரி அடையாளப்படுத்துவது போன்ற முயற்சிகளுடன், deepfakeகளைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது .

தவறான தகவல்களின் விரைவான பரவல் தேர்தல் செயற்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் என்பதால் தேர்தல்களின் போது சமூக ஊடக உள்ளடக்கத்தை கண்காணிப்பது அரசாங்கங்களுக்கும் தேர்தல் அமைப்புகளுக்கும் குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்துகிறது.

பாரம்பரிய ஊடகங்களைப் போலன்றி, சமூக ஊடகங்கள் நிகழ்நேரத்திலும் பல தளங்களிலும் செயற்பட்டு, ஒழுங்குபடுத்தலை சிக்கலாக்குகின்றன. டிஜிட்டல் தளங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் ஈடுபாட்டை மேம்படுத்தும் அதே வேளையில், தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மையையும் அச்சுறுத்துகின்றன.

டிஜிட்டல் ஜனநாயகம் வளரும் போது, குறிப்பாக சமூக ஊடக பிரச்சாரத்தின் மூலமாக, ஜனநாயக ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் எதிர்கால அமைப்பில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மனுஜா விஜேசூரிய முற்போக்கு அரசியல் மற்றும் கொள்கைக்கான நிலையமான Muragalaவில் ஆராய்ச்சி ஆய்வாளர் என்பதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையின் இளங்கலைப் பட்டதாரியும் அரசியல் புவிப்பரம்பல், இன-அரசியல் மற்றும் இணையவெளி புவியியல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவராவார்.