மட்டு. மாவட்டத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு 29 கோடி ரூபா பெறுமதியான அரிசி வழங்கல்
றிப்தி அலி
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 368 குறைந்த வருமான பெறும் குடும்பங்களுக்கு 29 கோடி 70 இலட்சத்து 99 ஆயிரத்து 200 ரூபா பெறுமதியான அரிசி வழங்கப்பட்டுள்ள விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாகத் தெரியவந்துள்ளது.
மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களுக்கான இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவித்தல் மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.எஸ். பசீரினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் அதிகூடிய 23 ஆயிரத்து 400 குறைந்த வருமான பெறும் குடும்பங்கள் ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலக பிரிவிலேயே வாழ்க்கின்றன. இக்குடும்பங்களுக்காக 4 கோடி 44 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோரளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலக எல்லையிலேயே ஆகக் குறைந்த 6 ஆயிரத்து 885 குறைந்த வருமான பெறும் குடும்பங்கள் வாழ்கின்றன. இதற்காக ஒரு கோடி 30 இலட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமான பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசி விநியோகம் தொடர்பில் பட்டிருப்பினைச் சேர்ந்த கு. வேணுஜாவினால் மண்முனை தென் எருவில் பற்று - களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு வழங்கப்பட்ட பதிலிலேயே இந்த விடயம் தெரியவந்தது.
நாட்டு மக்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத் திட்டத்திற்கமைய குறைந்த வருமானம் பெறும் சுமார் 27 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசியினை இலவசமாக அரசாங்கம் வழங்கியது. இதற்காக அரசாங்கத்தினால் சுமார் 126.1 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)