'முஸ்லிம் அமைப்புக்களையும், தனி நபர்களையும் பயங்கரவாத பட்டியலில் சேர்த்தமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பிரேரணைக்கு முரண்'
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் அறிக்கை
"2009 இல் யுத்தம் முடிவடைந்ததாலும் மீண்டும் போரிடுவதற்கான தேவை இல்லாததால் நீண்ட காலமாக நிலவிய இனங்களுக்கிடையிலான மோதல் தீர்த்து வைக்கப்பட வேண்டும்" என அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில்வாண்மையாளர்களின் வருடாந்த மாநாட்டில் தெரிவித்த கருத்தை வரவேற்கின்ற அதேவேளை, தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் சிறுபான்மையினரின் சிவில் அமைப்புக்களையும் தனி நபர்களையும் தொடர்ந்தும் இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஜனாதிபதியும் அவரது அரசும் இடமளிக்கக்கூடாது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் சட்டத்திற்கு முரணான வகையில் மேற்கொள்ளப்படும் சில செயற்பாடுகள் நாட்டுக்குள் தீவிரத்தன்மையை அதிகரிக்கச் செய்து மோதல்களுக்கு காரணமாக அமைந்து விடுமோ என நாம் அஞ்சுகின்றோம்.
அனைத்து மதத்தினரினதும் “சாபமாக” சிலரால் வர்ணிக்கப்படுகின்ற, நாடு எதிர்நோக்கியுள்ள கடுமையான இப்பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை அடைவதற்கு தற்போது அவசரத் தேவையாக இருப்பது, அனைத்து இனங்களின் ஒற்றுமையும் சகல நாடுகளது பொருளாதார ஒத்துழைப்பும் ஆகும்.
ஆனாலும் வெளிவிவகார அமைச்சு அதன் பொறுப்பு வாய்ந்த (competent authority) அதிகாரி ஊடாக வெளியிட்ட 2022 ஆகஸ்ட் 1ஆம் திகதி பட்டியலிடலில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் 1999 இன் 1267ஆவது பிரேரணை மற்றும் 2015 இன் 2253 பிரேரணை உள்ளிட்ட பிரேரணைகள் அடங்கலாக அதன் பின்னர் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட 8 பிரேரணைகள் என்பன தவறாக பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
பாதுகாப்பு கவுன்சிலின் பிரேரணைகளது தெளிவான நோக்கம், முன்னைய தலிபான் மற்றும் அதன் பின்னரான அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எல். போன்ற பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுவதனைக் கட்டுப்படுத்துவதாகும்.
அந்த வகையில் எந்தவொரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கும் நிதி உதவி அளித்ததாகவோ அல்லது அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எல்.க்கு ஒத்துழைப்பு நல்கியதாகவோ எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் இலங்கையின் 6 அமைப்புக்களையும் 156 நபர்களையும் எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்?
இந்த சிவில் அமைப்புக்களில் எதுவும் அல்லது இலங்கையர் எவரும் எந்த சந்தர்ப்பத்திலும் தலிபான், அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புக்களுக்கு நிதி உதவி அளித்ததாக வெளிநாட்டு அமைச்சில் ஏதேனும் சான்றுகள் உள்ளனவா?
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் 2015 இல் 2253 பிரேரணையின் ஊடாக, பிரேரணை இலக்காக கொள்ளும் அமைப்புக்கள் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஐ.எஸ்.ஐ.எல்., அல்-கொய்தாவுடன் நெருங்கிய ஒத்துழைப்பு அல்லது கிளை அமைப்புக்களாக செயற்படும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் 2 ஆவது பிரிவிலும், பட்டியலிடப்படுவதற்கான அளவுகோல்கள் குறித்து 3ஆவது பிரிவிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கையின் 6 முஸ்லிம் அமைப்புக்களும் 156 தனிநபர்களும், ஐ.எஸ்.ஐ.எல், அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்களுடன் நிதி ரீதியிலான ஒத்துழைப்பு அல்லது இணைந்து செயலாற்றுகின்றனர் என்பதுதான் வெளிவிவகார அமைச்சின் நிலைப்பாடா?
அப்படியானால் சர்வதேச ரீதியாக சேதமுண்டாக்கும் இவ்வியாக்கியானங்கள் மற்றும் நபர்களின் செயற்பாடுகளை மையமாக வைத்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நஷ்டஈடு வழக்குகளை தொடர்வதற்கு இந்நிலைப்பாட்டை தவறாக பயன்படுத்தவும் இவை காரணமாக அமையக்கூடும்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன 2019.04.21 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய பாராளுமன்ற தெரிவிக்குழு முன்னிலையில், இலங்கையின் ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலின் குண்டுதாரிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எல், அல்கொய்தாவுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று சாட்சிமளித்திருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும்.
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் இவ்வாறான தொடர்பு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் இதற்கு முன்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளை இலங்கை பாதுகாப்பு அமைச்சு பல சந்தர்ப்பங்களில் மறுத்திருந்ததும் மறுக்க முடியாத உண்மையாகும்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்பின் மீது பொறுப்பு சுமத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து கிறிஸ்தவ தேவாலயங்கள் கூட பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்ததன.
தற்போதைய இந்த முயற்சிகள், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் மற்றும் இயக்கங்களுக்கும், இல்லாத ஒரு தொடர்பை இருப்பதாக காட்டும் ஓர் பயங்கர முயற்சியாகும் எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் 41 ஆவது பிரிவின் கீழ் சொல்லப்பட்டு 2022 ஆகஸ்ட் 1ஆம் திகதி பெயரிடப்பட்ட நபர்களின் பட்டியலிடல் பல்வேறு காரணங்களால் செல்லுபடியற்றது என்பதோடு அதற்கு எந்த சட்ட அதிகாரமும் இல்லை.
41ஆவது பிரிவின் படி ஐ.நா.வின் மிகவும் தெளிவான நோக்கமாவது, நாடுகளுக்கு இடையிலான யுத்தம், மோதல்களை தவிர்ப்பதற்கேயன்று ஐ.எஸ்.ஐ.எல் அல்லது அல்கொய்தாவுடன் சம்பந்தப்படாத நபர்களுக்கும் அமைப்புக்களுக்கும் இடையூறு விளைவிப்பதோ அவமானப்படுத்துவதோ அச்சுறுத்துவதோ அல்ல என்பதும் தெளிவு.
இவை 2015 இன் 2253 பாதுகாப்பு கவுன்சிலின் பிரேரணையின் இரண்டாவது அத்தியாயத்திலும் 3ஆவது அத்தியாயத்திலும் பட்டியலிடப்படுவதற்கான அளவுகோலைக் குறித்துரைத்துள்ளது.
இதற்கு மேலாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகளின் சில உறுப்புரிமைகள் சர்வதேச சட்டங்கள், இலங்கையின் அரசிலமைப்பு உறுப்புரைகள் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் 2015 இன் 2253 பிரேரணைகளுடன் முரண்படுவதாக உள்ளன.
அதனால் முஸ்லிம் அமைப்புக்கள், தனிநபர்கள் பட்டியலிடப்பட்டுள்ளமையை விரைவாக மீள்பரிசீலனை செய்து செல்லுபடியற்றதாக்காவிடின், ஹேக் சர்வதேச நீதின்றத்திலும் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் கீழும் கொழும்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணக்குழுவிலும் அது பிரச்சினைக்குரியதாக மாற முடியும்.
Comments (0)
Facebook Comments (0)