இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியை பாராட்டும் இலங்கை மாணவர்கள்
இந்திய அரசாங்கத்தின் விசேட நிதி உதவியை பாராட்டும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் புவியியல் பீடத்தினைச் சேர்ந்த மாணவர் ஒருவர், “இவ்வாறு வழங்கப்படும் மாதாந்த நன்கொடை உதவியானது நிதி ரீதியான அழுத்தங்களை நிவர்த்தி செய்வதில் மிகுந்த பயனுள்ளதாகவிருக்கின்ற அதேவேளை, எனது கல்வியில் அதிக கவனம் செலுத்துவதற்கும் இடமளிக்கின்றது.
அத்துடன் இந்த நிதி உதவியானது, நிதி ரீதியான சுமைகள் குறித்து கவனம் செலுத்தாமல், சீரான வருகையினைப் பேணி எனது கல்வியில் கவனம் செலுத்தவும் வழிவகுக்கின்றது. எனது கல்வி ரீதியான செயல்திறனுக்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் இந்த ஆதரவு கணிசமான பங்களிப்பினை வழங்குகின்றது”, எனத் தெரிவித்திருந்தார்.
அதேபோல, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞான பிரிவினைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த உதவித் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும்போது, "இந்த உதவி மிகவும் பயனுள்ளதாகும். மாதாந்த கல்விச் செலவீனத்தை இதனால் ஈடுசெய்யமுடிகின்றது.
அத்துடன் எனது கல்வித்தேவைக்கான நூல்களை கொள்வனவு செய்தல், நிழற்பிரதி எடுத்தல், அச்சு செலவீனங்கள் மற்றும் எனது உணவுத் தேவைகள் போன்ற செலவீனங்களுக்கு இந்த நன்கொடை உதவி ஆதரவாக உள்ளது”, எனக் குறிப்பிட்டார்.
மேலும், கலைப் பீடத்தில் கலாசார சுற்றுலாத்துறை குறித்து பயின்றுவரும் மற்றொரு மாணவர், தனது கள விஜயங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு இந்த உதவி ஆதரவளிப்பதாக குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசேட நிதியுதவித் திட்டத்திற்காக பொருளாதார ரீதியாக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்தும் அதேபோல பொருளாதார ரீதியாக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த ஏனைய 100 மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்தும் இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வருடம் முழுவதும் மாதாந்த நன்கொடை உதவி வழங்கும் இந்தத் திட்டமானது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு புலமைப் பரிசில் திட்டங்களில் ஒன்றாகும்.
இந்தியாவால் வருடாந்தம் 710 புலமைப்பரிசில்கள் இலங்கை மாணவர்களுக்காக வழங்கப்படுவதுடன் இதில் 200க்கும் அதிகமானவை முழுமையான நிதி அனுசரணையினைக் கொண்டதுடன் முழுமையான கல்விக்கடணம், மாதாந்த உதவித் தொகை, காகிதாதிகள் மற்றும் புத்தகங்களுக்கான கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து செலவீனம் ஆகியவற்றை முழுமையாக உள்ளடக்கியதாக காணப்படுகின்றன.
அத்துடன் பொறியியல் முதல் மனிதநேயம், விஞ்ஞானம், விவசாயம், பாரம்பரிய மருத்துவம் குறித்த கற்கைகள் வரையான பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, மற்றும் கலாநிதி கற்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகவும் உள்ளன.
Comments (0)
Facebook Comments (0)