ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாரளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராபக்ஷவினால் இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
2022ஆம் நிதியாண்டின் சேவைகளுக்கான செலவுகளை திரட்டு நிதியத்திலிருந்து அல்லது ஏதேனும் பொருத்தமான நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்வது, இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான இந்த ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது.
அதற்கமைய, 2022 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2022 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான கலப்பகுதிக்கான சேவைகளுக்கான இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐந்து பில்லியன் முன்னூற்று நாற்பத்தாறு மில்லியன் ஐந்நூற்று ஐம்பத்தெட்டாயிரம் ரூபா அரச செலவினங்களுடன் தொடர்பான மீண்டெழும் செலவுகள் மற்றும் மூலதன செலவுகளுக்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி, சட்டமூலத்தின் முதலாவது வாசிப்பு இன்று இடம்பெற்றதோடு, இரண்டாம் வாசிப்பு எனப்படும் நிதி அமைச்சரினால் முன்வைக்கப்படும் வரவு செலவுத்திட்ட உரை, இரண்டாம் வாசிப்பு மற்றும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இடம்பெறும் நாட்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படும்.
அரசிலமைப்பின் xvii அத்தியாயத்திற்கு அமைய அரச நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு பாராளுமன்றத்திடம் காணப்படுவதோடு, வரி நியமித்தல், திரட்டு நிதியத்திலிருந்து அல்லது ஏதேனும் பொருத்தமான நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்களுக்காக பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய 26 நாட்களுக்கு மேட்படாத தினங்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை கருத்தித்தில் கொள்வதற்கு ஒதுக்கப்படுகின்றது. அதில் இரண்டாம் வாசிப்புக்காக 07 நாட்களுக்கு மேற்படாத தினங்கள் ஒதுக்கப்படும்.
Comments (0)
Facebook Comments (0)