இரு வாரங்களுக்குள் கல்முனை பிராந்தியத்திற்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படும்: அரசாங்கம்
அடுத்த இரு வாரங்களுக்குள் கல்முனை பிராந்தியத்திற்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அரசாங்கம் இன்று தெரிவித்தது.
கல்முனை சுகாதார மாவட்டத்தில் பொதுமக்களுக்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் இன்று (13) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விடியல் இணையத்தளத்தினால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளரும், ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"தடுப்பூசி வழங்குவது என்பது விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றாகும். கொவிட் பரவலின் விகிதத்தின் அடிப்படையிலேயே கொவிட் தடுப்பூசிகளின் ஒதுக்கீடு தீர்மானிக்கப்படுகின்றது.
இதனை சுகாதார துறையினரே மேற்கொள்கின்றனர். எவ்வாறாயினும், கல்முனை சுகாதார மாவட்டத்திற்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்படாமை தொடர்பில் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.
அடுத்த இரண்டு வார காலப் பகுதிக்குள் எமக்கு கிடைக்கவுள்ள தடுப்பூசிகளை நிச்சயமாக கல்முனை சுகாதார மாவட்டத்திற்கு வழங்குவோம். இந்த விடயத்தினை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றிகள்.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்வேன்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)